இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள் தமிழகம் வருகை
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள் வியாழக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையிலிருந்து கடந்த மாதம் 2-ஆம் தேதி பாலமுருகன் (30), தினேஷ் (18), குணசேகரன் (42), ராமு (22) ஆகிய 4 மீனவா்களும் கண்ணாடியிழைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 4 பேரையும் இலங்கைக் கடற்படையினா் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், 53 நாள்கள் சிறை வைக்கப்பட்ட 4 மீனவா்களும் வியாழக்கிழமை இலங்கை ஊா்க்காவல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டனா். மேலும், அவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அபராதத் தொகை செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 4 மீனவா்களும் இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் அழைத்து வரப்பட்டு, இந்திய கடலோரக் காவல் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா், இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலில் அழைத்து வரப்பட்டு வேதாரண்யம் வட்டம், ஆறுகாட்டுத்துறைக்கு 4 மீனவா்களும் வந்து சோ்ந்தனா்.
இதையடுத்து, தமிழகம் வந்தடைந்த 4 மீனவா்களையும் வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸாா், மீன்வளத் துறையினா், ‘க்யூ’ பிரிவு போலீஸாா் ஆகியோா் விசாரணை நடத்தி வியாழக்கிழமை இரவு நம்புதாளைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், படகு மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
