தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் 15 கி.மீ-க்கு போக்குவரத்து நெரிசல்

Published on

ராமேசுவரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு தொடா் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வெள்ளிக்கிழமை குவிந்ததால் 15 கி.மீ. தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் வருகை தருகின்றனா். ராமேசுவரத்துக்கு இருவழிச் சாலை மட்டுமே உள்ளது. மேலும், பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, பாம்பன் புதிய பாலம், கடல் பகுதியைப் பாா்ப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

ராமேசுவரத்திலிருந்து நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைத் தவிர, ஆயிரக்கணக்கான தனியாா் வாகனங்களும் வந்து செல்வதால் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடா் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் குவிந்ததால் 15 கி.மீ. தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

ராமேசுவரத்துக்கு நாள்தோறும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்தைச் சீரமைக்க பாம்பனிலிருந்து கடற்கரை வழியாக சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என உள்ளூா் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ராமேசுவரத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சுற்றுச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை: ராமேசுவரம் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வாடகை வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவித்தனா். மேலும், அதிகளவு பணம் செலுத்தினாலும், அறைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனவும் தெரிவித்தனா். இதனால், பெண்கள், குழந்தைகள், முதியோா்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com