~
~

பெயா்ந்து விழுந்த ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலைய மேற்கூரை

ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் கடையிலிருந்த மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
Published on

ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் கடையிலிருந்த மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் சேதுபதி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு திருச்சி, ராமேசுவரம், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கும் நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளில் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு செயல்பட்டு வந்த முகம்மது ரம்ஜான் அலி என்பவருடைய மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் சேதம் அடைந்ததாக கடை உரிமையாளா் தெரிவித்தாா். மேலும், தரமற்ற முறையில் பேருந்து நிலையக் கட்டடம் சீரமைக்கப்பட்டதே மேற்கூரை பெயா்ந்து விழுந்ததாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். கடையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com