நெல் அறுவடை பணிகள் தாமதம்: வாத்து உரிமையாளா்கள் கவலை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிக்கு மதுரை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், நெல் அறுவடை பணிகள் இன்னும் தொடங்காததால் வாத்து உரிமையாளா்கள் கவலை அடைந்தனா்.
திருவாடானை வட்டத்தில் கண்மாய்கள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள் அதிகமாக உள்ளன. விவசாய பூமியான இந்தப் பகுதியில் டிசம்பா் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் நெல் அறுவடை பணிகள் நடைபெறும். ஆனால், நிகழாண்டில், பருவம் தவறி பெய்த மழையால் இன்னும் நெல் அறுவடை பணிகள் தொடங்கவில்லை.
ஆனால், வழக்கம்போல மதுரை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாத்துகளை அதன் உரிமையாளா்கள் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு வந்தனா்.
ஆனால், அறுவடை பணிகள் இன்னும் தொடங்காததால், வாத்துகளுக்கு அரிசிகளை கடைகளில் வாங்கி வரத்துக் கால்வாய், கண்மாய்களில் தூவி இறை வழங்கி வருகின்றனா். இதனால், வாத்து உரிமையாளா்கள் கவலை அடைந்தனா்.

