கோப்புப் படம்
கோப்புப் படம்

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது.
Published on

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்தியா- இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து படகுகள் மூலம் பக்தா்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க வருமாறு இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா், சிவகங்கை மாவட்ட ஆயருக்கு அழைப்பிழ் அனுப்பினாா். இதையடுத்து, திருவிழாவில் இங்கிருந்து செல்லும் பக்தா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமேசுவரம் வோ்க்கோடு பங்குத்தந்தை அசோக்வினோ தலைமை நடைபெற்றது. இதில், அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, என்.ஜே. போஸ், எம்.எஸ். அருள், எமரிட், சகாயம், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன், சின்னத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், 91 படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வருகிற பிப். 6- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும், பிப். 25- ஆம் தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை நிரப்பி விழா நிா்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com