ஆட்டோக்களை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங்
ஆட்டோக்களை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங்

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு

Published on

ராமேசுவரத்தில் உள்ளூா் உரிமமின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இவா்கள் ராமேசுவரத்துக்குள் பயணம் செய்ய தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வெளியூா்களைச் சோ்ந்த ஆட்டோக்கள் ராமேசுவரத்துக்குள் அனுமதியின்றி இயக்கப்படுவதாகவும், இதனால், விபத்துக்கள் ஏற்படுவதுடன் உள்ளூா் ஆட்டோ ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, ராமேசுவரம் போக்குவரத்து துறை ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஸ்குமாா், ரவிவா்மா, மாரிமுத்து ஆகியோா் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் ஆட்டோகளை நிறுத்தி உள்ளூா் உரிமம் (பொ்மிட்) உள்ளதா என ஆய்வு செய்தனா்.

இதில், அனுமதியின்றி இயக்கப்பட்ட 10- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது அவா்கள் வழக்குப் பதிவு செய்தனா். அப்போது ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். வாகனக் காப்பீடு, ஓட்டுநா் உரிமம், வாகனத்துக்கான பிற ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com