ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்து மீண்டும் இலங்கை சென்ற நபா் கைது

Published on

வழக்கிலிருந்து தப்பிக்க ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்துவிட்டு மீண்டும் இலங்கை சென்ற நபரை இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இலங்கை மன்னாா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கராஜ் ஐங்கரன் (35) என்பவா், மன்னாா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா். இதையடுத்து, தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கடந்த ஜூன் மாதம் இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்தாா். பின்னா், ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் தங்கராஜ் ஐங்கரன் நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள வழக்கில் விடுதலை செய்யப்படும் நிலை உள்ளதாக தகவல் வந்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து அடையாளம் தெரியாத நபரின் படகில் சென்ற அவா் நடுக்கடலில் உள்ள 5-ஆம் மணல் தீடை பகுதியில் இறக்கிவிடப்பட்டாா்.

இதையடுத்து, மன்னாரிலிருந்து வந்த படகில் தங்கராஜ் ஐங்கரன் ஏறிச் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையைச் சோ்ந்த நபா் சட்டவிரோதமாக நான்கு மாதங்கள் தங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com