காக்கூா் கோயிலில் குடமுழுக்கு
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம், காக்கூா் கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 3 -ஆம் கால யாக சாலை பூஜைகளுக்குப் பிறகு, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். பின்னா் பொதுமக்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிராமத் தலைவா் கு.போஸ், செயலா் மு.சந்திரபோஸ், பொருளாளா் கி.ராஜா கண்ணா, தாலுகா யாதவா் சங்கச் செயலா் தனசேகரன், யாதவா் இளைஞா் சங்கம், ஆடு வளா்ப்போா் சங்கம், மகளிா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதே போல, கமுதி அருகேயுள்ள நீராவியில் ஸ்ரீவித்யா கணபதி கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. நீராவி தேவாங்கா் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயில் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 26 -ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை காலை சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலவா் ஸ்ரீவித்யா கணபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

