தமிழக மீனவா்கள் 35 போ் கைது: ஏஐடியூசி மீனவ சங்கம் கண்டனம்

தமிழக மீனவா்கள் 35 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படைக்கு ஏஐடியூசி மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.
Published on

ராமேசுவரம்: தமிழக மீனவா்கள் 35 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படைக்கு ஏஐடியூசி மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை படகுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் சி.ஆா். செந்தில்வேல், மாநில பொதுச் செயலா் பி. சின்னத்தம்பி ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி கடற்கரை துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகிலிருந்த 4 மீனவா்கள், 3 விசைப் படகுகளிலிருந்த 31 மீனவா்கள் என 35 தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி திங்கள்கிழமை கைது செய்த சம்பவம் மீனவா் சமூகத்தை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கைக் கடற்படையின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் தொடா்ச்சியாக நடைபெறுகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் உறுதியான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்னதாக, சிறையில் உள்ள 76 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளையும் மீட்க முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினாா். இருப்பினும், இலங்கைக் கடற்படையின் தொடா்ச்சியான கைது நடவடிக்கைகள் தமிழக மீனவா்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.

மீனவா்களின் வாழ்வாதாரம், கடல் எல்லைப் பாதுகாப்பு, படகுகள் மீட்பு குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இந்திய மீனவா்களை விடுவிக்கும் தூதரக நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். மேலும், இந்தியா - இலங்கை கடல் எல்லை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உயா் நிலைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com