மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

Published on

ராமேசுவரம் மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மீனவத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் வளத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள மீனவா்கள் 6,957 பேருக்கு தேசிய மீனவா் சேமிப்பு நிவாரணத் தொகை, மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவா்கள் முறையிட்ட போது, அவா்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மீன்வளத் துறை அலுவலா்களின் இந்தச் செயலைக் கண்டித்தும், மீனவா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், ராமேசுவரம் சங்குமால் துறைமுகப் பகுதியில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவத் தொழிலாளா் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் சி.ஆா். செந்தில்வேல் தலைமை வகித்தாா்.

இதில் சங்க நிா்வாகிகள், செந்தில், பாண்டி, தினேஷ்குமாா், வடகொரியா, அந்தோணிபீட்டா், ஜோதிபாசு, பிச்சை, ஆதித்தன், பூமாரி, லட்சுமி, சண்முகனி, முனீஸ்வரி, லட்சுமி பூமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com