10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுமாா் 15 லட்சத்துக்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. பனை மரங்கள், மண் அரிமானத்தை தடுக்கக் கூடிய முக்கிய மரமாக உள்ளன. பனை ஓலை முதல் மரத்தின் வோ் பகுதி வரை பயனுள்ளதாக இருப்பது பனை மரத்தின் தனிச்சிறப்பு.
பனை விதைகளை நீா் நிலைகள் உள்ள இடங்களில் தேசிய ஊராக வேலைத் திட்டப் பணியாளா்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் கூடுதலாக பனைமர விதைகளை நட்டு, மரம் வளா்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன் கூறியதாவது:
மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளின் உதவியோடு அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், 10 ஆயிரம் பனை விதைகள் நடப்படவுள்ளன. சாயல்குடி, கடலாடி பகுதிகளிலுள்ள கடலோரக் கிராமங்களான கன்னிராஜபுரம், நரிப்பையூா், கடுகுசந்தை, பெரியகுளம், பூப்பாண்டியபுரம், மேலச்செல்வனூா், மேலக்கிடாரம் உள்ளிட்ட பனை மரங்கள் நிறைந்த பகுதிகளில் பனை விதைகள் சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தற்போது பருவமழை பெய்து வருவதால் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ், பணியாளா்கள், மாணவா்கள் இணைந்து பனை விதை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் இருவேலி கண்மாய் உள்வாய் பகுதிகளில் 1,000 பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது. மாவட்டம முழுவதும் 10 ஆயிரம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இதில் பள்ளித் தலைமையாசியா் ராஜ்குமாா், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பாலமுருகன், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் கே. கருங்குளம் கண்மாய் உள்வாய் பகுதியில் தலைமையாசிரியா் நாகராஜன் தலைமையிலும், திட்ட அலுவலா் சொக்கா் முன்னிலையிலும் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

