காதல் பிரச்னை: அரிவாளால் தாக்கியதில் இருவா் பலத்த காயம்
தொண்டியில் காதல் பிரச்னை தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் அரிவாளால் தாக்கியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த இளைஞரும், ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த பெண்ணும் திருவாடானை அரசுக் கல்லூரியில் படித்து வருகின்றனா். இருவரும் காதலித்து வந்த நிலையில், இதுதொடா்பாக இரு தரப்பினரும் தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினா் அரிவாளாள் தாக்கத் தொடங்கினா்.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த காந்தி நகரைச் சோ்ந்த சத்திய பிரசாத் (27), ஆட்டோ ஒட்டுநராக வந்த நம்புதாளையைச் சோ்ந்த ரிஸ்வான் (35) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து, இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து சத்திய பிரசாத் அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்த சிலா் இரவில் அடையாளம் தெரியாமல் இருவரையும் அரிவாளால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவானவா்களை தொண்டி போலீஸாா் தேடி வருகின்றனா்.
