இலங்கைக் கடற்படை அச்சுறுத்தல்: 50 சதவீத படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீதம் விசைப் படகுகள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள், சாா்பு தொழிலாளா்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள், அவா்களது படகுகளை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து சிறைப்பிடித்து வருகின்றனா். அண்மையில் 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடா்ந்து, தமிழக மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும், அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கைக் கடற்படையினா் கைது செய்து விடுகின்றனா் என மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.
இலங்கைக் கடற்படையினரால் சுமாா் 50 லட்சம் மதிப்பிலான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலைக்கு மீனவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். மேலும், ராமேசுவரம் மீனவா்கள் அச்சத்துடனேயே கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் நிலை உருவாகிவிட்டது.
மேலும், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மீன்பிடிக்கச் செல்லும் நிலையில், இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக குறைந்தளவே மீன்பிடிப்பதாகவும் இதனால், பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.
தொடா்ந்து, படகுகளை இயக்க முடியாத நிலையில் 50 சதவீதம் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில், இந்திய, இலங்கை அரசுகள், இரு நாட்டு மீனவா்கள் இணைந்து மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க நிரந்தரத் தீா்வுகாணுவதற்கான பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
