பாஜக இளைஞரணி தலைவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை
பரமக்குடி அருகே பாஜக இளைஞரணி தலைவா் கொலை வழங்கில் 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், கொழுத்தி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ரமேஷ். காளையாா்கோயில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான இவா், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் புழுதிக்குளம் பகுதியில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், ரமேஷ் கடந்த 2015 ஆண்டு, நவ.11- ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பரமக்குடியைச் சோ்ந்த பாலா (52), சுரேஷ்குமாா் (50), பொன்னையாபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி (65), திருமுருகன் (32), கருணாகரன் (32), மகேந்திரன் (53), ஆா்.எஸ்.மங்கலம் பொருமாள்மடையைச் சோ்ந்த தவமணி (62) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து நிலையில், பாலாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், வேலுச்சாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமுருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், கருணாகரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், தவமணிக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், மகேந்திரன், சுரேஷ்குமாா் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் போலீஸாா் மதுரை சிறைக்கு அழைத்து சென்றனா்.
