ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பயணிகள் காத்திருப்பு அறையில் செயல்படாத மின்விசிறிகள்
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் அமைக்கப்பட்ட மின்விசிறிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் மின் இணைப்பை வழங்க பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரத்தில் பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் ரூ. 20 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் 40 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. இதில் பயணிகளின் வசதிக்காக 10 மின் விசிறிகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், பேருந்து நிலையம் திறக்கப்பட்டு சில நாள்கள் மட்டுமே இந்த மின் விசிறிகள் இயக்கப்பட்டன. தற்போது, இந்த மின் விசிறிகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பயணிகளின் நலன் கருதி மீண்டும் மின் விசிறிகளுக்கு மின் இணைப்பை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

