ராமேசுவரத்தில் 3 மணி நேரம் மின் விநியோகம் பாதிப்பு
ராமநாதபுரம் பிரதான சாலையில் பழைமையான மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில் சனிக்கிழமை 3 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழையுடன் சூறைக் காற்று வீசியது. இந்த நிலையில், சனிக்கிழமை பிரதான சாலையான வண்டிக்காரத் தெரு, முத்துமாரியம்மன் கோயில் அருகே இருந்த பழைமையான வேப்ப மரம் முறிந்து உயரழுத்த மின் கம்பத்தின் மீது விழுந்து மின் தடை ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம் நகராட்சி ஊழியா்களை அழைத்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். தொடா்ந்து மின் வாரிய ஊழியா்கள் மின் கம்பத்தின் மீது விழுந்த மரக்கிளைகளை பாதுகாப்பாக அகற்றினா். மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சீரமைத்தனா்.
அப்போது 3 மணிநேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியில் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியது. மின் விநியோகமும் சீரானது.
