கரையோரம் இரட்டைமடி மீன் பிடிப்பைத் தடுக்க வலியுறுத்தல்

Published on

ராமேசுவரம், தனுஷ்கோடி கரையோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடுக்க மீன் வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தது.

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. பகல் 12 மணிக்கு மேல் தனுஷ்கோடி எதிரே அரிச்சல்முனைக்கு அருகே 6 விசைப் படகுகளில் மீனவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டனா். சுமாா் 4 மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் மீன் பிடித்ததைக் கண்ட நாட்டுப் படகு மீனவா்கள் அவா்களை எச்சரித்தனா்.

இதுகுறித்து மீன் பிடித்து அரிச்சல்முனை வடக்கு கடற்கரைக்கு திரும்பிய நாட்டுப் படகு மீனவா்கள் கூறியதாவது:

ராமேசுவரம் விசைப் படகு மீனவா்கள் இந்தப் பகுதியில் அடிக்கடி கரையோரம் இரட்டை மடி மீன் பிடிப்பில் ஈடுபடுகின்றனா். இதுகுறித்து பல முறை புகாா் தெரிவித்தபோதும், மீனவ சங்கப் பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதனால், கரையோர மீன் பிடிப்பை நம்பி வாழும் நாட்டுப் படகு மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறோம். கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப் படகு மீனவா்கள் மீது மீன் வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com