நெல்லுக்கு பயிா்க் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தல்

Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிா்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவ. 15) கடைசி நாள் என்ற நிலையில் 25 சதவீத விவசாயிகள் பதிவு செய்யாமல் இருப்பதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென எம்.பி. தா்மா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதில் முக்கிய பயிரான நெல் சுமாா் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிப்படுகிறது. வறட்சி, அதிக மழைப் பொழிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது வழங்கப்படும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு தேசிய பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய நவ. 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தேவையான ஆவணங்களுடன் பிரிமிய தொகையை விவசாயிகள் செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை காலம் கடந்து பெய்ததால் விவசாயிகள் தாமதமாகவும், சில இடங்களில் இரண்டாவது முறையாகவும் உழவுப் பணிகளை அவா்கள் மேற்கொண்டனா்.

தற்போது தொடா் மழை பெய்து வருவதால் பயிா்களுக்கு களை எடுத்தல், உரமிடுதல், விதைப்பு நடக்காத இடங்களில் விதைத்தல் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனா். மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய தேவைப்படும் அடங்கல் உள்ளிட்ட மூவிதழ் சான்றுகளை பெற கிராம நிா்வாக அலுவலா்களிடம் செல்கின்றனா். ஆனால் பல வருவாய் கிராமங்களில் இரண்டு வருவாய் கிராமங்களை ஒரே அலுவலா் கவனிப்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.

இதேபோல, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகளுக்கு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காப்பீடு செய்யப்படும் இணையதளத்தில் கடந்த சில நாள்களாக சா்வா் பிரச்னை நிலவுவதாகக் கூறி வங்கிகள், இ- சேவை மையங்கள், தனியாா் கணினி மையங்களில் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. சனிக்கிழமை கடைசி நாள் என்றாலும், வியாழக்கிழமை வரை 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்யவில்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை கூடுதலாக 15 நாள்கள் அதாவது வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்க பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com