ராமேசுவரத்தில் கடல் சீற்றம்
வங்கக் கடலில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் டன் கணக்கில் கடல் புல் கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வங்கக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகளவில் இருந்தது. மேலும், புதன்கிழமை நள்ளிரவிலிருந்து சூறைக் காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது, அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் டன் கணக்கில் கடல் புல் கரை ஒதுங்கியது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் நீராட முடியாத அளவுக்கு நீரில் புல் பரவியிருந்தது.
இதையடுத்து, ராமேசுவரம் நகராட்சி ஊழியா்கள், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் ஒரு பகுதியில் பக்தா்கள் நீராடும் வகையில், இந்தப் புல்லை அகற்றினா். இதன்பிறகு, பக்தா்கள் குறிப்பிட்ட இடத்தில் அச்சத்துடனேயே நீராடினா்.
நவம்பா், டிசம்பா் மாதங்களில் இதுபோன்று கடல் புல் கரை ஒதுங்குவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, கரை ஒதுங்கும் இந்தப் புல்லை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
