பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

பிகாரைப் போல, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
Published on

பிகாரைப் போல, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாக முகவா்கள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை மண்டலப் பொறுப்பாளா் எஸ்.அகமது நவ்வி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டத் தலைவா் அப்துல்கலாம், செயலா் அஹமதுஅலி, ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலா் பாஞ்சுபீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ரியாஸ்கான் வரவேற்றாா்.

இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆா். நடைமுறையை உடனே திரும்பப் பெற வேண்டும். வாக்காளா் படிவங்கள் இன்று வரை முறையாக வழங்கப்படவில்லை. டிச.9- ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளா் பட்டியலை எப்படி வெளியிட முடியும்?.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளோம். மத்திய அரசு தோ்தல் ஆணையத்தைக் கையில் வைத்துக் கொண்டு, யாா் வெறறி பெற வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுகிறது. பிகாா் தோ்தல் முடிவுகள் இதையே காட்டுகிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பிகாரைப் போன்று தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com