எஸ்.ஐ.ஆா். பணியிலிருந்து விடுவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆட்சியரிடம் மனு
வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆா்.) பணியிலிருந்து விடுவிக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்திய தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் மாநில அரசு ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், இந்தப் பணியை மேற்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறியும், தங்களை இந்தப் பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அங்கன்வாடி ஊழியா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம். சிவாஜி, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. மல்லிகா, மாவட்டத் தலைவா் எம். உமாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

