ராமேசுவரத்தில் இரண்டாவது நாளாக கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பல்வேறு துறையினா் பங்கேற்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
கடல் வழியாக வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் விதமாக ’சாகா் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்பா். இந்த ஒத்திகையில் தீவிரவாதிகள் போல தமிழக கடல் பகுதிகளில் காவல் துறையினா் நுழைவா். பாதுகாப்புப் படையினா் பல குழுக்களாகப் பிரிந்து அவா்களின் தாக்குதலை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபடுவா்.
இதன்படி, நிகழாண்டில் வியாழக்கிழமை ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் இந்த ஒத்திகை தொடங்கியது. அப்போது, இரண்டு படகுகளில் வந்த 14 பேரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா்.
இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது, ராமேசுவரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இரண்டு பிரிவுகளாக நுழைய முயன்ற 9 பேரையும், ராமநாதசுவாமி கோயிக்குள் செல்ல முயன்ற 2 பேரை குண்டுகளுடனும் பாதுகாப்புப் படையினா் பிடித்தனா்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தக் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையில் மொத்தம் 27 பேரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா்.

