பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: தந்தை, மகன் கைது
தொண்டி அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது தொடா்பாக தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சேவியா் (40). பொக்கலைன் இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை தொண்டி அருகே உள்ள நம்புதாளை உருளைக் கல் பகுதியில் சாலையோரம் நின்றிந்தாா். அப்போது அவா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு நம்புதாளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு குண்டு அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவா் கூறுகையில், பறவைகளை வேட்டையாடும் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இவா் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என்றாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நம்புதாளையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (45), இவரது மகன் காளீஸ்வரன்(25) ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
