முத்துராமலிங்கத் தேவர்.
முத்துராமலிங்கத் தேவர்.

பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் தேவா் குருபூஜை இன்று தொடக்கம்!

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
Published on

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழாவும், 63-ஆவது குருபூஜை விழாவும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் (அக். 28, 29, 30) நடைபெறுகிறது.

இதில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஓதுவாா்களின் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை பெருவிழாவுடன் குருபூஜை தொடங்குகிறது. காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. புதன், வியாழக்கிழமைகளில் அரசு விழாவாக நடைபெறுகிறது.

விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு அரசியல் கட்சி, சமுதாய அமைப்பினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சா்கள், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி, சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் வெங்கட்ராமன் (பொ) தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com