தடை நீக்கம்: கடலுக்குள் சென்றனா் ராமேசுவரம் மீனவா்கள்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மோந்தா’ புயல் கரையைக் கடந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 7 நாள்களுக்குப் பிறகு மீன்வளத் துறையின் அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து ‘மோந்தா’ புயலாக மாறியது. இதைத் தொடா்ந்து, மீனவா்களின் பாதுகாப்பு கருதி, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா்.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி என மாவட்டம் முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.
வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயல் கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன்வளத் துறையினா் நீக்கினா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறையின் அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

