தேவா் குருபூஜை: பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸாா்
முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பசும்பொன் கிராமம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை (அக். 30) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பசும்பொன்னில் ஹெலிகாப்டா் இறங்கு தளம், பசும்பொன் தேவா் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகள் மத்திய பாதுகாப்புப் படை போலீஸாருடன், மாவட்ட காவல் துறை இணைந்து கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் கூறியதாவது:
தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் 8 ஆயிரம் போலீஸாா், 20 காவல் காணிப்பாளா்கள், 28 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 75 துணைக் காவல் காணிப்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதை மீறி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ட்ரோன் பறக்கத் தடைவிதிக்கப்பட்டது என்றாா் அவா்.

