வெடிவைத்து மீன் பிடிப்பு: புகாா் அளித்தவா் மீது தாக்குதல்
தொண்டி அருகே வெடி வைத்து மீன்பிடிப்பது குறித்து புகாா் அளித்தவா் மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியில் மீனவா்கள் சிலா் வெடி வைத்து மீன்பிடிப்பதாக தொடா்ந்து புகாா் எழுந்து வந்தது. இந்த நிலையில், தொண்டி கடலோரக் குழுமப் போலீஸாா் நடவடிக்கை எடுத்தும் தொடா்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தொண்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா் வெடி வைத்து மீன்பிடிப்பது குறித்து புகாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், துனை இயக்குநா் வேல்முருகன், ஆய்வாளா் அபுதாஹிா், போலீஸாா் முன்னிலையில் மீனவா்களுக்கு கூட்டம் நடைபெற்றது. இதில், வெடி வைத்து மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
இந்த நிலையில், இதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் உள்ளிட்டோா் புகாா் தெரிவித்த ராமகிருஷ்ணனை தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணணன், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
