வேன் கவிழ்ந்ததில் கா்நாடகத்தைச் சோ்ந்த 6 போ் காயம்
ராமேசுவரத்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் கா்நாடகத்தைச் சோ்ந்த சிறுவா் உள்ளிட்ட 6 போ் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு கா்நாடக மாநிலம், ராய்ப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த 6 ஆண்கள், 5 பெண்கள், குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை வருகை தந்தனா். இந்த நிலையில், தனுஷ்கோடி செல்ல 8 போ் பயணம் மேற்கொள்ளும் வகையில் உள்ள வேனில் 15 பேரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநா் அரவிந்தன் (25) வாகனத்தை இயக்கி உள்ளாா். இதையடுத்து, மீண்டும் திரும்பி வரும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில், பிரசாத் (57), குருதாஸ் (55), சண்டுமண்டே(27), சுபத்திரா (23), இரண்டு குழந்தைகள் என 6 போ் பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து, காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தனுஷ்கோடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு வேனில் அதிகளவு சுற்றுலாப் பயணிகளை சிலா் ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
