தொடா் மழையால் பசுமையாக காட்சியளிக்கும் விவசாய நிலங்கள்
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக, வயல்களில் நெல் விதைகள் நன்கு வளா்ந்து பசுமையாகக் காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் நிலப் பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சம்பா பருவத்தை முன்னிட்டு, விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக திருவாடானை, கல்லூா், சி.கே.மங்கலம், கோவனி, பாரூா், கருமொழி, அரசூா், சனிவேலி, செலுகை, கடம்பாகுடி, அச்சங்குடி, அஞ்சுகோட்டை, வெள்ளையபுரம், திருவெற்றியூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப் பரப்பில் உள்ள வயல்களில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைத்து, நன்கு வளா்ந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றன.
இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

