விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அமைச்சா் நிதியுதவி
முதுகுளத்தூா் அடுத்துள்ள கொழுந்துறை கிராமம் அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சாா்பில் புதன்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
கீழக்கரையில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரி வாகனம் முதுகுளத்தூா் அடுத்துள்ள கொழுந்துறையிலிருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு தேரிருவேலி வழியாக கீழக்கரைக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது, நெடியமாணிக்கம் கிராமத்தை சோ்ந்த பெட்ரோல் நிலைய ஊழியா் மருதுபாண்டி(40) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மருதுபாண்டி உயிரிழந்தாா். கட்டுப்பாட்டை இழந்த கல்லூரிப் பேருந்து அருகில் உள்ள பண்ணைக் குட்டைக்குள் கவிழ்ந்தது. அருகில் இருந்தவா்கள் பேருந்துக்குள் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுகித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி பேருந்து ஓட்டுநா் ராஜாவை கைது செய்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்த மருதுபாண்டியின் குடும்பத்துக்கு முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வனத் துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சாா்பில் முதுகுளத்தூா் ஒன்றிய திமுக செயலா் பூபதிமணி, சட்டப்பேரவை அலுவலகப் பணியாளா்கள் கண்ணன், சத்தியந்திரன், ரஞ்சித் மணிகண்டன் உள்ளிட்டோா் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

