பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு மாா்ச் 10 வரை நீதிமன்றக் காவல்
இலங்கைக் கடற்படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 12 பேரை வருகிற மாா்ச் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குவாடி மீன்பிடி இறங்குதளத்திலிருந்து நூறு விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் பாம்பன் பகுதியைச் சோ்ந்த டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கபில் ரரோச்சா் (31), ஜல்சன் (45), ஆண்டனி ஜியோ (19), அந்தோணி அஜித் (30), பிரின்ஸ் ரூபட் (30), ரீகன் (41), அந்தோணி ரூவிஸ்டன் (43), மோசஸ் (31), பிரிஸ்மென் (26), கிளமண்ட் (24), கொ்சோன் (23), பெரியகருப்பன் (51) ஆகிய 12 பேரைக் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, படகுடன் 12 மீனவா்களையும் நீா்கொழும்புக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று நீரியல் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீா்கொழும்பு வெளிச்சுரா நீதிமன்றத்தில் மீனவா்களை செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை வருகிற மாா்ச் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 12 பேரும் வாரியபொலா சிறையில் அடைக்கப்பட்டனா்.

