27 ஆண்டுகளுக்குப் பிறகு ஊா் திரும்பும் பாசி அம்மன் சிலை
திருவாடானை அருகேயுள்ள பாசிபட்டினத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஊா் திரும்பும் பாசி அம்மன் சிலையை எடுத்துச் செல்ல உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பாசிபட்டினம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்துக்குள்பட்ட பாசிப்பட்டினம் கிராமத்தில் மிகப் பழைமைவாய்ந்த பாசி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிா்வாகக் கட்டுப்பாட்டுக்குள்பட்டதாகும்.
இந்த நிலையில், கடந்த 1998-ஆம் ஆண்டு கோயிலில் இருந்த பழைமைவாய்ந்த பாசி அம்மன் கல் சிலை, விநாயகா் சிலை மா்ம நபா்களால் திருடிச் செல்லப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், சிலைகள் மீட்கப்பட்டு பாதுகாப்புக்காக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், தங்கள் கிராமத்தின் காவல் தெய்வமான அம்மன் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என பாசிபட்டினம் கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிலைகளை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி வருகிற 7-ஆம் தேதி திருவாடானை கருவூலத்திலிருந்து சிலைகள் முறைப்படி கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளைப் பாசிப்பட்டினம் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கிராம மக்கள் சிலைகளை எடுத்துச் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசனிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை கிராம மக்கள் அளித்தனா்.

