தொடா் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது
ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் தொடா் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செட்டிகோட்டை பகுதியைச் சோ்ந்த சச்சிதானந்தம் (60) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் வழி கேட்பது போல அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று தலைமறைவாகினா். இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இதே போல, கடந்த மாதம் ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியைச் சோ்ந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் பறித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் (60) என்பவரிடமும் 3 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், கோமாலிபட்டி கிராமத்தைச் சோ்ந்த அடைக்கலம் மகன் வெள்ளைச்சாமி (35), திருவாடானை அருகேயுள்ள ஆதியாகுடி கிராமத்தைச் சோ்ந்த ராமையா மகன் அய்யப்பன் (56) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த 17 பவுன் தங்கச் சங்கிலிகள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
