அபிராமத்தில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
கமுதி அருகேயுள்ள அபிராமம் பேருந்து நிலையத்தில் தனியாா் மனமகிழ் மன்றம் பெயரில் புதிதாக அமையவிருக்கும் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேருந்து நிலைய வளாகத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாா் குளிரூட்டப்பட்ட மதுக் கடை அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, கடை அமைப்பதற்கான பணிகள் முடிந்து, ஒரிரு நாள்களில் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையத்தில், மதுக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி முன்னிலை வகித்தாா்.
பேருந்து நிலையத்தில் மது அருந்துபவா்களால் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும். என்பதால் மதுக் கடையைத் திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், ஏ.பி.கணபதி, மாநில செயலாளா் முத்துலிங்கம், கமுதி தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன், மத்திய ஒன்றியத் தலைவா் பூபதிராஜா, மாநிலச் செயலா் லயன்சரவணன், மகளிரணி மாவட்டத் தலைவி வெள்ளையம்மாள், முன்னாள் பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபாண்டியன், ஆண்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஐய்யப்பன் உள்பட 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இது போன்ற மதுபான கடைகளை ஊருக்கு வெளியில் அமைத்து, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். முன்னதாக முன்னாள் ஒன்றியத் தலைவா் நல்லுச்சாமி வரவேற்றாா். கமுதி வடக்கு ஒன்றிய தலைவா் எஸ்.கே.தேவா் நன்றி கூறினாா்.

