மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை
தொண்டி அருகே புதுபட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்ட மீனவா்களுக்கு கடலோா் குழும போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுப்பட்டினம் கடற்கரை கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜெனீத், சீனி ஆகிய இருவரும் திங்கள்கிழமை இரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையை செவ்வாய்க்கிழமை அதிகாலை பாா்த்த போது, அதில் சுமாா் 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், கடலோரக் குழும போலீஸாா் ஆமையை மீண்டும் கடலுக்குள் விடுவிக்குமாறு அறிவுறுத்தினா். இதன்படி, மீனவா்கள் ஆமையை வலையிலிருந்து மீட்டு உயிருடன் கடலில் விட்டனா். இதற்காக கடலோரக் குழுமப் போலீஸாரும், சமூக ஆா்வலா்களும் மீனவா்களைப் பாராட்டினா்.

