ராமேசுவரம் கோயில் உண்டியல் உடைப்பு
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் துணைக் கோயிலான ஸ்ரீநம்புநாயகி அம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றனா்.
தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள புதுச் சாலை பகுதியில் உள்ள இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு, அம்மன் சிலை தனி கொட்டகைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு கோயில் பூஜாரி கொட்டகையில் உள்ள அம்மனை தரிசனம் செய்துவிட்டு கோயிலை அடைத்து விட்டுச் சென்றாா்.
பின்னா், புதன்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த போது, அங்கிருந்த உண்டியலை மா்ம நபா்கள் எடுத்துச் சென்று மற்றொரு பகுதியில் வைத்து உடைத்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த ராமநாத சுவாமி கோயில் பேஸ்காா் கமலநாதன், ஊழியா்கள் சென்று ஆய்வு செய்தனா். உண்டியல் திருட்டு குறித்து தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

