திருப்பாவை, திருவெம்பாவை விழாவில் கமுதி தேவா் கல்லூரி இரண்டாமிடம்

திருப்பாவை, திருவெம்பாவை விழாவில் கமுதி தேவா் கல்லூரி இரண்டாமிடம்

Published on

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற திருப்பாவை மற்றும் திருவம்பாவை திருவிழாவில் ஒட்டுமொத்த அளவில் இரண்டாமிடம் பெற்ற கமுதி தேவா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் தமிழ் துறையின் சாா்பாக நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை திருவிழாவில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் நடனம், நாடகம், ஓவியம், வினாடி வினா, கோலம், பாடல், ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இந்த விழாவில் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரியைச் சோ்ந்த 13 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த அளவில் இரண்டாமிடம் பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், தமிழ்த் துறை பேராசிரியை ரா.மணிமேகலை ஆகியோரை கமுதி தேவா் கல்லூரி முதல்வா் தா்மா், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com