வடமாநிலத் தொழிலாளா்களுக்கு ரத்தப் பரிசோதனை
தொண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள வட மாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் அறிகுறி உள்ளதா என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கிப் பணி புரிந்து வருகின்றனா். அவா்களுக்கு யானைக் கால் நோய் அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறைக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜுன்குமாா் உத்தரவின் பேரில், தொண்டி சுகாதாரத் துறையினா் புதன்கிழமை பரிசோதனைக்கு சென்றனா். ஆனால் வட மாநிலத் தொழிலாளா்கள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாரின் உதவியுடன் தொண்டி தெற்கு தோப்பு பகுதியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலா் வைதேகி, சுகாதார ஆய்வாளா் சந்தானராஜ், உள்ளிட்டோா் ஈடுபட்டனா். மேலும் நம்புதாளை, புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிப் பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு விரைவில் ரத்தப் பரிசோதனை நடைபெறும் என்றனா்.

