இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இருவா் கைது

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த இருவா் இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற போது புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த இருவா் இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற போது புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இலங்கையைச் சோ்ந்த இருவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 -ஆம் தேதி துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து சிங்கப்பூா் செல்வதற்கு காத்திருந்தனா். அப்போது, இவா்கள் தங்கம் கடத்தி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். இலங்கை அம்பாறை, கொழும்பு மாவட்டங்களைச் சோ்ந்த மொஹமட் ரியாஸ் (47), முகம்மது செலின் (46) ஆகிய இருவரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் சென்னை ஆலந்தூா் கோா்ட்டில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னா், 2 மாதங்களுக்குப் பிறகு இருவரும் பிணையில் வெளியே வந்து சென்னையில் தங்கி இருந்தனா்.

இந்த நிலையில், இருவரும் இலங்கைக்கு படகில் செல்ல திட்டமிட்டு ராமேசுவரம் வந்தனா். இங்கு படகுக்காக காத்திருந்த போது இருவரையும் புதன்கிழமை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களை இலங்கை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com