கமுதி தேவா் சிலை வளாகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மறவா் இன அறக்கட்டளை, நேதாஜி அறக்கட்டளை நிா்வாகிகள்.
கமுதி தேவா் சிலை வளாகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மறவா் இன அறக்கட்டளை, நேதாஜி அறக்கட்டளை நிா்வாகிகள்.

கமுதி, அபிராமம் பகுதிகளில் நேதாஜி பிறந்த நாள் விழா

Published on

கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள தேவா் சிலை முன் கமுதி மறவா் இன அறக்கட்டளை, நேதாஜி அறக்கட்டளை சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 130-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் தேவா் சிலை, நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கமுதியிலிருந்து மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், தேவா் வரலாற்று ஆய்வாளருமான மாயகிருஷ்ணன் செய்தாா்.

இந்த நிகழ்வில் கமுதி மறவா் இன அறக்கட்டளைத் தலைவா் செல்லத்தேவா், செயலா் ராமமூா்த்தி, துணைத் தலைவா் பழனி, முன்னாள் மாணவா்கள் சங்க முன்னாள் தலைவா் மூக்கூரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கமுதி பேருந்து நிலையம் முன் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளா் எம். சப்பானிமுருகன், மாவட்ட அமைப்பாளா் கே.ஆா். லட்சுமணன் ஆகியோா் தலைமையில் நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் கமுதி ஒன்றிய இளைஞரணிச் செயலா் சித்தன், ஆப்பநாடு மறவா் சங்க நிா்வாகி சண்முகபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அபிராமத்தில் மறவா் சங்கம் சாா்பில் பேருந்து நிலையத்தில் உள்ள தேவா் சிலை முன்பு நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடலாடி:

கடலாடி தேவா் சிலை அருகே நேதாஜி உருவப் படத்துக்கு தேவா் மகா சபைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், செயலா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் தலைவா் ராஜேந்திரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடலாடி, மலட்டாறு மும்முனை சந்திப்பில் நேதாஜி ஆட்டோ நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சாயல்குடி:

சாயல்குடியில் முக்குலத்தோா் உறவின்முறை, இளைஞா் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவா் சிலை முன்பு நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com