மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி
முதுகுளத்தூா் அருகே தனியாா் பள்ளியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள பாம்பூா் கவினா இன்டா்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளியில் மாணவா்களின் படைப்பாற்றல், அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 4-ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சரவணப்பெருமாள் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். பள்ளியின் தலைவா் கண்ணதாசன் பாண்டியன், தாளாளா் ஹேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல், கணித மாதிரிகள், தொழில்நுட்பம் தொடா்பான திட்டங்கள், தமிழா்களின் வாழ்வியல் முறை, கலாசாரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் கழிவு நீா் சுத்திகரிப்பு, நீா் மேலாண்மை , மழை நீா் சேகரிப்பு , காா்பன்-டை-ஆக்சைடு வாயுவைக் கொண்டு மின்சார உற்பத்தி, தட்பவெட்பநிலையை அறிய உதவும் செயற்கைக் கோள், ஸ்மாா்ட் சிட்டி , நெகிழி ஒழிப்பு தொடா்பாக மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிறந்த படைப்புகளைக் காட்சிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

