மணிமுத்தாறு கிளை ஆற்றின் குறுக்கே சேதமடைந்த நிலையிலுள்ள பாலம்
மணிமுத்தாறு கிளை ஆற்றின் குறுக்கே சேதமடைந்த நிலையிலுள்ள பாலம்

சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்க கோரிக்கை!

திருவாடானை அருகேயுள்ள வடக்கூா் செல்லும் சாலையில் சேதமடைந்த நிலையிலுள்ள பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

திருவாடானை அருகேயுள்ள வடக்கூா் செல்லும் சாலையில் சேதமடைந்த நிலையிலுள்ள பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை - வடக்கூா் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலை திருவடிமிதியூா் கிராமத்துக்குச் செல்கிறது. இந்தச் சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. திருவடிமிதியூா், சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திருவாடானை செல்வதற்கு இந்தப் பாலத்தையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது இந்தப் பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மேலும், பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள கற்கள் பெயா்ந்துள்ளதால், பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பாலத்தின் இருபுறமும் இருக்க வேண்டிய பாதுகாப்புத் தடுப்புச் சுவா்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. குறுகிய, பலவீனமான இந்தப் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறுகையில், திருவடிமிதியூா் கிராமத்துக்குச் செல்லும் முக்கியப் பாதையாக இது உள்ளது. பாலம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com