சாயல்குடி பேருந்து நிலையத்துக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்துகள்
சாயல்குடி பேருந்து நிலையத்துக்கு வராமல் அரசு பேருந்துகள் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம், கடலாடி, தூத்துக்குடி, திருச்செந்தூா், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகள் சாயல்குடி பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாமல், மலட்டாறு வழியாகச் சென்று 20 முதல் 30 நிமிஷங்கள் வரை அங்குள்ள தனியாா் உணவகத்தில் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுவதோடு, பேருந்து நிலையத்தை சோ்ந்த சிறு, குறு வியாபாரிகளும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாகவும் வியாபாரிகள் தரப்பில் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், அனைத்து அரசுப் பேருந்துகளையும் சாயல்குடி பேருந்து நிலையத்துக்குள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாயல்குடி பேரூராட்சித் தலைவா் மாரியப்பனிடம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

