சிவகங்கை மாவட்டத்தில் குப்பைகளை சேமிக்கும் கிடங்கை பூங்காவாக மாற்றியும், விவசாயிகளுக்கு பயன்படும் உரத்தை தயாரித்து இலவசமாக வழங்கியும் வருகிறது புதுவயல் பேரூராட்சி நிர்வாகம்.
புதுவயல்-அறந்தாங்கிச்சாலையில் பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலம் குப்பைக்கழிவு கொட்டும் பகுதியாக இருந்தது. மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளால் தூர்நாற்றம் வீசியது. இந்நிலையில் கடந்த 2014- 2015 ஆம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வளம் மீட்பு பூங்காவின் உரம் களம் என்ற பொருளில் ஒரு பகுதி நிதியைக் கொண்டு சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காவாக மாற்றவும், உரத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதுவயல் பேரூராட்சி செயல் அலுவலர் சுப. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசும் பகுதி இப்பகுதி இருந்தது. இதனை மாற்றவேண்டும் என்று திட்டமிட்டு தற்போது அப்பகுதி அழகான பூச்செடிகள், பயனுள்ள காய்கறிச் செடிகளை வளர்த்து பூங்காவாக இப்போது உருவாக்கியுள்ளோம். இங்கு கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளை சுத்தப்படுத்தவும், துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் மீன் வளர்ப்புத் தொட்டியும் இங்கு அமைத்துள்ளோம். 2 மாடுகளையும் இங்கு வளர்ப்பதால் இப்பகுதியில் வீணாகும் இலைகள் மற்றும் செடி கொடிகளை அவை தின்று விடுகின்றன. இதனால் தூய்மையான பகுதியாக அது திகழ்கிறது.
புதுவயல் பேரூராட்சியில் சேரிக்கப்படும் குப்பைகளை இந்த சேமிப்புக் கிடங்கில் வைத்து மக்கும், மக்காத குப்பையாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளை பரப்பி அதன்மீது மாட்டுச்சாணத்தை கரைத்து தெளித்து வைக்கப்படும். பின்னர் 45 நாள்களில் அது உரமாக மாறிவிடுகிறது.
பின்னர் இயந்திரம் மூலமாக சலித்து எடுத்து உரமாக சேமித்து வைக்கப்படும். இதனை விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப பைகளில் நிரப்பி இலவசமாக வழங்கி வருகிறோம். இதனை வெளியில் வாங்கினால் 1 கிலோ உரம் ரூ.3 ஆகும். மேலும் மண்புழு உரமும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதனை குறைந்த விலையாக 1 கிலோ ரூ.10-க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் வெளியிலிருந்து பார்க்கும்போது முகப்பு பகுதி அழகுற காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக ஆர்ச் வடிவில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.