திருப்பத்தூர் பகுதியில் மஞ்சு விரட்டுக்கு தயாராகும் காளைகள், காளையர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் மஞ்சுவிரட்டிற்கு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க இளைஞர்களும் தயாராகி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் மஞ்சுவிரட்டிற்கு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க இளைஞர்களும் தயாராகி வருகின்றனர். 
திருப்பத்தூர் பகுதியில் சிராவயல், அரளிப்பாறை, நெடுமறம், மகிபாலன்பட்டி, கண்டரமாணிக்கம், கண்டிப்பட்டி, தேவபட்டு, உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக திருப்புத்தூர் அருகேயுள்ள சிராவயல் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ் வாய்ந்தது. இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
மஞ்சுவிரட்டுக்காக மட்டும் இங்கு சுமார் 80 ஏக்கர் இடம் பொட்டலாக விடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மஞ்சுவிரட்டுக்கு பல்வேறு ஆண்டுகளாக உள்ள தடை நீககப்பட்டு வரும் பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு நடைபெறும் என்பதால் ஆர்வத்துடன் தென் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர். இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியில் மஞ்சுவிரட்டிற்காக காளைகளும், காளைகளை அடக்க இளைஞர்களும் தயாராகி வருகின்றனர்.
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு கடந்த சில வாரங்களாக வெல்லம், பச்சரிசி, பருத்திக்கொட்டை, பேரீச்சம்பழம், கத்திரிக்காய், குளுக்கோஸ் போன்ற சத்தான உணவு வகைகள் கொடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 
மேலும் வேகமாக ஓடும்போது இளைப்பு வராமல் இருக்க இஞ்சி சாரும், வேகமாக ஓடுவதற்காக நீச்சல் பயிற்சியும், தன்னை யாரும் நெருங்காத வகையில் காத்துக்கொள்ள கொம்புகளால் மண்ணை குத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேகமாக ஓடும்போது கற்கள், முட்களால் கால்களில் காயம் ஏற்படாமல் இருக்க கால் நகங்களில் இரும்பு தகடுகளால் லாடம் கட்டப்படுகிறது. மேலும் திமில்களை உதறிக்கொண்டு குதிப்பது, சீறிப்பாய்வது, மாடுபிடி வீரர்களைப் பார்த்து ஒடாமல் நின்று விளையாடும் பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர். வீரர்களுக்கு உடல் பரிசோதனையும் நடக்க உள்ளது. 
இதுகுறித்து திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் கூறியது:
நாங்கள் காளை கன்றுக்குட்டிகளை இரண்டரை வயது முதல் மஞ்சுவிரட்டிற்காக தயார் செய்கிறோம். 
அதற்காக சிறுவயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுத்தருகிறோம். முதலில் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க வைப்போம். அதனை தொடர்ந்து பழகிய பின்னர் பெரிய மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க விடுகிறோம். எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் மஞ்சுவிரட்டு நடந்தாலும் நடந்து சென்ற பாதையிலேயே சுவாசத்தை வைத்து கொண்டு மஞ்சுவிரட்டு முடிந்ததும் தானாகவே வீடு திரும்பி வந்துவிடும். 
இதே போல் கோயில் மாடுகளுக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. அது மஞ்சுவிரட்டிலும் தொடரும். கோயில் காளைகளை அலங்கரித்து பட்டு வேட்டி, துண்டு, நெத்திப்பாரை கட்டி, கொம்பில் எலுமிச்சம்பழம் குத்தி, உடல் முழுக்க சந்தனம் தெளித்து கோயிலிலிருந்து கிராமத்தினர் முன்னிலையில் மேள தாளத்துடனம் தொழுவிற்கு அழைத்து வரப்பட்டு முதலில் அவிழ்த்து விடுவார்கள். 
மாடு பிடிவீரர்கள் யாரும் கோயில் மாடுகளை பிடிக்கமாட்டார்கள். காரணம் அந்த காளைகளை எந்த கோயில் தெய்வத்திற்கு நேர்ந்து விடுகிறார்களோ அந்த சுவாமியாகவே கருதுகின்றனர். ஆகையால் தொட்டு வணங்கிவிட்டு விட்டுவிடுவார்கள். பின்னர் தான் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்ப்பார்கள். 
மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுகளில் மாடுகளை அடக்கி பிடிப்பதை மகிழ்ச்சியாக கருதுகின்றோம். இப்போட்டிகளில் கலந்து கொண்டு மாடுகளை அடக்குவது குறித்து எங்கள் முன்னோர்கள் கற்று கொடுத்தவாறு பின்பற்றுகின்றோம். 
மஞ்சுவிரட்டுக்கு முன் முதல் நாளே எங்கள் குலதெய்வத்திடம் திருவலம் கேட்டு பின் உத்தரவு கொடுத்த பின்பே மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு மாடுகளை பிடிப்போம். இல்லையெனில் மஞ்சுவிரட்டுக்கு செல்லமாட்டோம். மாடுகளை பிடித்தால் அதில் இருந்து துண்டை எடுத்து கொண்டு சலங்கைமணிக்கு மாட்டின் உரிமையாளரிடம் காணிக்கையை வாங்கிகொண்டு விட்டு மணியை திரும்ப கொடுத்து விடுவோம். இவ்விளையாட்டு எங்கள் பாரம்பரியம் என்பதால் எங்களுக்கு பின் வரும் தலைமுறையினருக்கு முறையாக கற்று கொடுப்போம் என்று கூறினார். 

ஆங்கிலேயர்களை ஏமாற்றிய கிராமத்தினர்
ஆங்கிலேயர் ஆட்சியில் மஞ்சுவிரட்டில் அதிகமான மனிதர்கள் உயிர் இழக்கின்றனர் என்று கூறி மஞ்சுவிரட்டு நடத்த தடை விதித்துள்ளனர். அப்போது சிராவயலைச் சேர்ந்த கிராம மக்கள் மஞ்சுவிரட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு அதை நிறுத்தக்கூடாது என்று முறையிட்டனர். அதற்கு பிரிட்டிஷ் அரசு கொம்பு இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்துங்கள் என்று கூறியுள்ளனர். அரசின் நிபந்தனைக்கு கிராமத்தினரும் ஒப்புக் கொண்டனர். பின்னர் மஞ்சுவிரட்டு நாளில் கொம்புகளுடன் மாடுகள் வருவதைப் பார்த்து அனைத்து மாடுகளுக்கும் கொம்பு உள்ளதே என்று ஆங்கிலேயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கிராமத்தினர் தாரை, தப்பட்டை மற்றும் கொம்பு வாத்தியத்துடன் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம், தாங்கள் கேட்டுக்கொண்டதால், கொம்பு வாத்தியம் இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்துகிறோம் என்று சாமர்த்தியமாக பதில் கூறி மஞ்சுவிரட்டை நடத்தியதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com