உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் தவிக்கும் காரைக்குடி கைத்தறி நெசவாளர்கள்

காரைக்குடியில் கைத்தறி பருத்தி நூல் சேலைகள் உற்பத்தி செய்துவரும் நெசவாளர்கள் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காததால்


காரைக்குடியில் கைத்தறி பருத்தி நூல் சேலைகள் உற்பத்தி செய்துவரும் நெசவாளர்கள் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காததால் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
 காரைக்குடிப்பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பருத்தி நூல் சேலைகள் மற்றும் செட்டிநாடு கைத்தறி பருத்தி நூல் சேலைகள் மிகவும் பிரபலமானவை. கைத்தறிச் சேலை நூல் அளவை கவுஞ்ச் என்று குறிப்பிடும் நெசவாளர்கள் 40, 60, 80, 100 ஆகிய கவுஞ்ச்களில் கைத்தறிச் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். பல வண்ணங்களில் சிறிய கட்டம், பெரிய கட்டம், பார்டரில் பூ வேலைப்பாடுகள் என பல்வேறு டிசைன்களில் கைத்தறி சேலைகளை நெசவாளர்கள் நெய்து விற்பனைக்கு தருகிறார்கள் என்கிறார் காரைக்குடி நா.புதூரில் சிறிய அளவில் கைத்தறி சேலைகள் விற்பனைக்கூடம் நடத்திவரும் அபிராமி ராஜூ. 
கைத்தறிச்சேலைகள் மற்றும் நெசவாளர்களின் நிலை குறித்து அவர் கூறியதாவது: காரைக்குடி நாகநாதபுரம் என்ற நா.புதூரில் சுமார் 800-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் உள்ளன. இவர்களின் மூதாதையர்கள் மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்புத்தேடி தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். சேலம், தாராபுரம், பாண்டிச்சேரி, சின்னாளபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தொழில்புரிந்து காரைக்குடிப் பகுதிக்கும் வந்திருக்கிறார்கள். பலதலைமுறைகள் கடந்த நிலையில் கைத்தறி பருத்தி நூல் சேலைகளை தரத்துடன் நேர்த்தியாக உற்பத்தி செய்து தருவதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.
ஆனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் தான் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. முன்பெல்லாம் நெசவாளர்களுக்கு நூல் வழங்கி கைத்தறி சேலைகளை நெய்து தருமாறு பெரிய நெசவாளர்கள் ஆர்டர் தந்தனர். தற்போது அவ்வாறு இல்லாமல் நெசவாளர்களே நூல், பாகு போன்றவற்றை வாங்கி கைத்தறியில் ஈடுபடுகின்றனர். ஒரு சேலையை நெய்வதற்கு குறைந்தபட்சம் 2 நாள்கள் ஆகிவிடும். இதற்கு கூலி என்று வைத்துக் கொண்டால் ரூ. 600 என்கிற நிலையில்தான் இருக்கும். இதிலும் பிடித்தம் போக ரூ.450 தான் கிடைக்கும். ஒரு சேலை நெய்வதற்கு 2 பேர் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய 2 பேரும் இந்த பணியை செய்யவேண்டிய நிலை உள்ளது. 
அதிலும் மதுரைக்குச் சென்றுதான் துணிநூல் வாங்கவேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவினங்களாலும், கிடைக்கின்ற கூலி பற்றாக்குறையாலும் நெசவாளர் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதில் திணறி வருகின்றனர். இதனால் சில நெசவாளர்கள் ஈரோடு, திருப்பூர்,வெள்ளக்கோவில், கோவை போன்ற நகரங்களுக்கு வேலைதேடிச் சென்று விடுகின்றனர். அதிலும் குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு இந்த நெசவுத் தொழில் மீது ஆர்வம் குறைந்து மாற்றுத் தொழிலையும் நாடி வருகின்றனர். வருங்காலங்களில் இந்த கைத்தறி சேலை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் கிடைப்பார்களா என்ற நிலைதான் ஏற்படும் என்றார்.
கைத்தறி நெசவுக்கூடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சரவணன், மீனா ஆகியோர்கூறியதாவது: செட்டிநாடு பருத்தி நூல் சேலைகள் உற்பத்தியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் கைத்தறி பருத்தி நூல் சேலை உற்பத்தியில் இதுபோன்ற கூடம் அமைத்து சேலைகள் நெய்து கொடுக்கிறோம். ஒரு கைத்தறிச் சேலையை நெய்து முடிக்க 2 நாள்கள் ஆகிவிடுகிறது. இது 2 பேர் செய்யக் கூடிய பணியாகும். கூலி போதுமான அளவுக்கு இல்லை. இதை தவிர்க்கவும் மனமில்லை. தனியாக நூல் வாங்கித் தான் நெய்து கொடுக்கிறோம். நாற்பது வயதை தொட்டவர்கள் தான் இப்போது கைத்தறியில் ஈடுபட்டுள்ளனர். 
இளைஞர்கள், இளம் பெண்கள் இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் வேறுதொழிலை நாடிச் செல்கின்றனர். துணி நூல், பாகு போன்றவை வாங்குவதற்கும், தறிகள் அமைப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. வங்கியை நாடிச் சென்றால் அவர்கள் தனி நபருக்கு கடன் தருவதில்லை. எனவே தமிழக அரசு எங்கள் நிலையை அறிந்து தேவையான உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com