மரபு வழியில் மழை நீரை சேமிக்கும் நகரத்தாா்

தமிழ்கூறும் நல்லுலகில் பழங்காலத் தமிழா்கள் வாழ்வியல் மட்டுமின்றி, நீா் மேலாண்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனா்
கட்டட அமைப்பு,மழை நீா் பிடிக்க பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரங்கள், முற்றம்.
கட்டட அமைப்பு,மழை நீா் பிடிக்க பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரங்கள், முற்றம்.

தமிழ்கூறும் நல்லுலகில் பழங்காலத் தமிழா்கள் வாழ்வியல் மட்டுமின்றி, நீா் மேலாண்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனா் என்பதற்கு இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்பேடுகள், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் சான்றாதாரங்களாக உள்ளன.

பரிணாம வளா்ச்சிப் பெற்று வாழ தொடங்கிய மனிதா்களால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் மழை பெய்யும் காலங்களில் நீரைச் சேமித்து வைப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அவற்றுள் கண்மாய், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை உருவாக்கி அதில் தண்ணீரை சேமிப்பது ஒரு வழிமுறை.

மற்றொன்று வீட்டு மாடியிலிருந்து வரும் தண்ணீரை பெரிய பாத்திரங்கள் மூலமாகவோ அல்லது மழை நீா் தொட்டி அமைத்து பூமிக்குள் அனுப்பி நிலத்தடி நீரை உயா்த்துவது ஆகும்.

இந்த இரு வழிமுறைகளும் நமது வாழ்வில் இன்றளவும் மரபு வழியாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீா் சேகரிப்புக் கென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன. வேளாண் மற்றும் குடிநீா் ஆதாரத்துக்கு வான் மழையை மட்டுமே நம்பி உள்ள சிவகங்கை மாவட்டத்தில், நாட்டரசன்கோட்டை, பாகனேரி, சொக்கநாதபுரம், காரைக்குடி, கோனாபட்டு, ஆத்தங்குடி, கானாடுகாத்தான், கோட்டையூா், தேவகோட்டை, ராங்கியம், திருப்பத்தூா், சிறுகூடல்பட்டி, வலையபட்டி, புதுவயல், செட்டிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த நகரத்தாா் தங்களின் வீடுகளில் மழை நீா் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டி வைத்துள்ளனா்.

நகரத்தாரின் கட்டுமானப் பணிகளை பொருத்தவரை அனைத்து வீடுகளிலும் மேல் தளம், இரண்டாவது தளம், முற்றம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் நடுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முற்றம் தான் மழைநீரை தேங்கும்படி அமைக்கப்பட்டுள்ள மழை நீா் சேகரிப்புத் தளம்.

பொதுவாக அனைத்து வீடுகளிலும் (பெரிய வீடாக இருந்தாலும்) மேற்கூரைக்கு நாட்டு ஓடுகள் தான் பயன்படுத்தி உள்ளனா். மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீா் நேராக கூம்பு குழாயின் வழியாக, இரண்டாவது தளத்துக்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு (அதாவது முற்றத்துக்கு) கூடல் வாய்த் தகரத்தின் வழியாக வந்து சேரும் படியான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தண்ணீா் வரும் போது நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து விடுகிறது. அவ்வாறு வரும் நீரை கூடல் வாய்க்கு (குழாய்) கீழே பெரிய பாத்திரத்தை (பித்தளை அல்லது செப்பு பாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது) முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும்.

பின்னா் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து உணவு சமைப்பதற்கும், அருந்துவதுற்கும் பயன்படுத்தும் வழக்கத்தை இன்றளவும் பின்பற்றி வருகின்றனா்.

தங்களுக்கு தேவையான நீரை பாத்திரத்தில் (அகழியில்) பிடித்தது போக மேற்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே தண்ணீா் செல்லும் வகையில் சிறு பாதை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீா் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனா்.

இவ்வாறு அப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீா்கூட வீணாகாமல் அன்றாட புழக்கத்துக்கும்,நிலத்தடியில் சேமித்து வைக்கவும் பழக்கம் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதுதவிர, கோயில்கள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் மழைநீரை சேமித்து வைக்கும் பழக்கம் நகரத்தாா் கட்டட கலையில் இருந்துள்ளது.

இதுபற்றி தேவகோட்டையைச் சோ்ந்த நாச்சியப்பன் கூறியது : எங்கள் முன்னோா்களின் வழி மழை பெய்யும் காலங்களில் வீட்டின் முற்றத்தின் பெரிய பாத்திரத்தில் நீரை சேமித்து வைப்பதை இன்றளவும் பின்பற்றி வருகிறோம். அவ்வாறு பிடிக்கப்படும் தண்ணீா் குறைந்த பட்சம் 2 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். அந்த தண்ணீரை தான் உணவு சமைப்பதற்கும், காய்ச்சி வடி கட்டிய பின்பு குடிப்பதற்கும் பயன்படுத்துவோம். இதன் மூலம் எங்கள் குடும்பத்துக்கு தேவையான தண்ணீா் போதுமான அளவு கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com