ஊர் பல சுற்றி கிழக்குக் கடற்கரை சாலைக்கு செல்லும் காரைக்குடி வியாபாரிகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து குறைந்த தூரமாக கிழக்குக் கடற்கரைச் சாலையை சென்றடையும்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து குறைந்த தூரமாக கிழக்குக் கடற்கரைச் சாலையை சென்றடையும் வகையில் புதிய இருவழி இணைப்புச்சாலை அமைக்கவேண்டும் என தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைவாக பயணிப்பதால் பயணநேரம் குறைகிறது என்பதால் பலரும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இச் சாலை வழியாக பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சென்னை, புதுச்சேரி என வடக்குப் பகுதிகளுக்கும், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என தெற்குப் பகுதிகளுக்கும் தொழிலதிபர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
தென்பகுதியிலும், வடபகுதியிலும் பல்வேறு தொழில்களை நடத்திவருபவர்களான செட்டிநாடு பகுதியான காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலரும் இந்த கிழக்குக் கடற் கரைச்சாலையை சென்றடைய தற்போது சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேவகோட்டை, திருவாடானை, தொண்டி வழியாகவும், சுமார் 65 கிலோமீட்டர் தூரம் உள்ள அறந்தாங்கி, கட்டுமாவடி வழியாகவும் செல்கின்றனர். இதனால் தூரமும், பயணநேரமும், எரிபொருளும் கூடுதலாக செலவாகிறது என்கின்றனர்.
 இதற்கு மாற்றாக, காரைக்குடியிலிருந்து குறைவான தொலைவில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையை சென்றடைய புதிய இருவழிச்சாலை அமைத்தால் பல்வேறு தரப்பினரும் பயனடைவர் என்கிறார் காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி. இது குறித்து மேலும் அவர் கூறியது: பாரம்பரியச் சுற்றுலாத் தலமாகவும், தொழிலதிபர்கள், வணிகர்கள், பல்கலைக் கழகம், கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் என பல தரப்பட்டோர் உள்ள பகுதியாக காரைக்குடி விளங்கிவருகிறது. இங்கிருந்து ராமேசுவரம்-திருச்சிக்கு இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடபகுதிக்கும், தென்பகுதிக்கும் விரைவாக செல்வதற்கு கிழக்குக் கடற்கரைச்சாலையை சென்றடைய தூரமும், பயணநேரமும் அதிகமாக இருப்பதால் கால விரயம் ஏற்படுகிறது.
அதனால், காரைக்குடியிலிருந்து ஏம்பல், ஆவுடையார் கோயில் வழியாக குறைந்த தூரமாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு இந்தச்சாலை அமைந்தால் காரைக்குடியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு எளிதாகச் சென்று அங்கிருந்து பட்டுக் கோட்டை, வேளாங்கண்ணி, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய வடக்குப் பகுதிகளுக்கும், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய தெற்குப் பகுதிகளுக்கும் விரைவாக சென்று வர முடியும். இதனை தொழிலதிபர்கள், வணிகர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
 சரக்கு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் காலவிரயம் தவிர்க்கப்பட்டு வளர்ச்சி ஏற்படும் என்றார்.

பெயர்பலகை  இல்லா காரைக்குடி
திருச்சி - ராமேசுவரம் இருவழி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய நகரங்களை தெரிந்து கொள்கின்ற வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காரைக்குடி நகரத்தை தெரிகின்ற வகையில் பெயர்பலகை வைக்கப்படவில்லை. புதுக்கோட்டையிலிருந்து திருமயம், கானாடுகாத்தான் வழியாக வரும் வாகனங்கள் காரைக்குடி பெயர் பலகை இல்லாததால் ஆவுடைப்பொய்கை பகுதியைக் கடந்து பாதரக்குடி-காரைக்குடி சந்திப்புச் சாலை வழியாக சென்று மீண்டும் காரைக்குடி நகருக்கு வேறு சாலையில் வருவதால் அவர்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு ஆவுடைப்பொய்கையிலிருந்து சில அடி தூரத்தில் உள்ள லீடர்ஸ் பள்ளி அருகே பெரிய அளவில் "காரைக்குடி நகரம்' என்ற பெயர் பலகை வைக்கவேண்டும். 
  அத்துடன் அந்தப் பகுதியில் இருவழிச்சாலையையும், காரைக்குடி நகருக்குள் வரும் சாலையையும் பிரிக்கின்ற வகையில் அணுகுச் சாலை அமைக்க வேண்டும்.
 இந்த இரண்டு கோரிக்கைகளையும் காரைக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தொழில் வணிகக் கழகம் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com