புத்துயிர் பெறுமா காரைக்குடி உழவர் சந்தை ?

காய்கறி விவசாயிகளின் புறக்கணிப்பால் காரைக்குடி உழவர் சந்தை வெறும் காட்சிப் பொருளாக மாறி வருகிறது.

காய்கறி விவசாயிகளின் புறக்கணிப்பால் காரைக்குடி உழவர் சந்தை வெறும் காட்சிப் பொருளாக மாறி வருகிறது. எனவே இதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு இதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரிய நகரமான காரைக்குடியில் கடந்த 2000 ஆம் ஆண்டில்   உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இங்கு தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மேற்பார்வையில் 36 கடைகள் உள்ளன. காரைக்குடி சுற்றுவட்டாரக்கிராமங்களான பெரியகோட்டை, சிறுகப்பட்டி, அரியக்குடி, கொத்தமங்கலம் மற்றும் காளையார்கோவில் பகுதிகளிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதற்காக விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள், அரசு பேருந்து வசதிகள் ஆகியன செய்து தரப்பட்டன. இத்திட்டத்தால் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்அடைந்து வந்தனர்.
பின்னர், உழவர் சந்தை செயல்பாடின்றி போனதால், இதற்கு புத்துயிர் அளிக்கின்ற வகையில் கடந்த 2006 இல் அப் போதைய மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சால் இதை மேம்படுத்தி உழவர் சந்தை நுழைவு வாயிலை மாற்றியமைத்து காய்கறி விற்பனையை மீண்டும் தொடக்கி வைத்தார். அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக உணவு விடுதி, கல்லூரிகளின் உணவு விடுதிகளுக்கு இதன் மூலமே காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அது இன்றைக்கும் அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி விடுதி எனத் தொடர்கிறது.
இந்நிலையில், தற்போது 3 கடைகள் உள்பட 12 பேர் மட்டும் உழவர் சந்தைக்கு காற்கறிகளை விற்பனை செய்யவருவதாகவும் இதர விவசாயிகள் வருவதில்லை என்றும் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார். 
இது குறித்து மேலும் அவர் கூறியது: உழவர் சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 338 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. காரைக்குடி அருகேயுள்ள பெரியகோட்டை, அரியக்குடி, கொத்தமங்க லம் ஆகிய கிராமங்களிலிருந்து காய்கறிகளை விவசாயிகள் இங்கு கொண்டு வருகின்றனர். 12 விவசாயிகள் நாள்தோறும் இங்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இங்கு காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தினந்தோறும் அறிவிப்புப் பலகையில் எழுதப்படுகிறது.
தற்போது பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டுவராமல் கோட்டையூர் ஸ்ரீராம் நகர் பகுதியிலும், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல்வீதி (ஆரியபவன் எதிரில்) மற்றும் சாலையோரமாகவும் விற்று வருகின்றனர். உழவர் சந்தை நிர்ணயித்த விலையில் காய்கறிகளை விற்பதில்லை. அரசின் அனைத்து பயன்களும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் வரமறுக்கின்றனர் என்றார்.
அரியக்குடியைச் சேர்ந்த காய்கறி பெண் விவசாயி கூறியது: அதிகாலையில் காய்கறிகளை பறித்து உழவர் சந்தைக்கு கொண்டுசென்றால் விலை கட்டுப்படியாகவில்லை. மேலும் பலர் ஆங்காங்கே காய்கறிகளை வாங்கிவிடுவதால் உழவர்சந்தைக்கு பொது மக்கள் வருவது குறைந்து காய்கறிகள் விற்பதில்லை. 
விற்காத காய்கறிகளை மறுநாள் விற்கவும் முடியாது என்பதால், மக்கள் அதிகம் வரும் பகுதிகளுக்குச் சென்று அவற்றை விற்கிறோம் என்றார்.
இதற்கு சரியான தீர்வு வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து உழவர் சந்தை மீண்டும் புத்துயிர்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com