திருப்புவனத்தில் அமமுக வேட்பாளர் பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 06:09 AM | Last Updated : 01st April 2019 06:09 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில், மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ். மாரியப்பன் கென்னடி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடும் இவர் திருப்புவனம் அருகேயுள்ள மார்நாடு கருப்பணசுவாமி கோயில் அருகே பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அங்கிருந்து திருப்பாச்சேத்தி, திருப்புவனம் நகர், கீழடி, லாடனேந்தல், செல்லப்பனேந்தல், பழையனூர், பூவந்தி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொண்டர்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நான் அரசியல் சூழ்ச்சியால் பழிவாங்கப்பட்டு உறுப்பினர் பதவியை இழந்துள்ளேன். எனவே தொகுதி மக்களுக்கு நன்மை செய்திட மக்கள் மீண்டும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.
அப்போது மாவட்டச் செயலாளர் உமாதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.